நெல்லையில் திருமண வீட்டாருக்கும் இறப்பு வீட்டாருக்கும் இடையே மோதல் திருநெல்வேலி: அம்பாசமுத்திரத்தை அடுத்த மேல ஏர்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகளுக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சார்ந்த வேலு என்ற 80 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
அடுத்தடுத்த தெருக்களில் திருமணமும் இறப்பு வீடும் இருந்த நிலையில், உயிரிழந்த வேலுவின் உடலை திருமண வீடு வழியாக கொண்டு சென்றுள்ளனர். அப்போது திருமண வீட்டில் பட்டாசு வெடித்து மேளதாளம் ழுழங்க கொண்டாட்டத்திலிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உயிரிழந்த வேலுவின் உறவினர் சின்ராசு திருமண வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஒருவருக்கொருவர் கம்புகளாலும், கற்களாலும் தாக்கிக் கொண்டுள்ளனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஏர்மாள்புரம் மினி பேருந்தின் கண்ணாடியை உடைந்தனர். வேலுவின் உடலை கொண்டு வந்த வாகனமும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் அப்பகுதி போர்க்களமாகக் காட்சி அளித்தது.
இதனையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் விகேபுரம் காவல்துறையினர் மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து வேறொரு வாகனம் மூலம் உடலை எடுத்துப் போக செய்தனர்.
அங்கு அங்கு ஏற்பட்ட மோதலில் ஏழுக்கும் மேற்பட்டவர்களுக்குப் படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இரு தரப்பையும் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது அம்பாசமுத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த தெருக்களைச் சேர்ந்த இரு வேறு சமூகத்தினர்க்கிடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:தேசிய விருது பெற்ற 'பசி' படத்தின் இயக்குநர் துரை காலமானார்! - Director Durai Passed Away