சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், மொழிகள் ஆய்வகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி திறந்து வைத்தனர்.
மொழிகள் ஆய்வகம் மூலமாக அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தை எளிய செயல்பாட்டின் வழியாக கற்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 6262 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேல்நிலைப் பள்ளிகளில் 20 கம்ப்யூட்டர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 10 கம்ப்யூட்டர்கள் என அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தினை பயன்படுத்துவதற்கு இண்டர்நெட் வசதியும் செய்துத் தரப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்பொழுது 100 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் வேகத்தில் 5373 அரசுப் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் முழுமையாக தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிறப் பள்ளிகளில் இண்டர்நெட் வசதிகள் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. எந்தவொரு மொழியும் தொடர்ந்து பேசினால் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில அறிவுத்திறனையும் வளர்க்க வேண்டும் என்பதற்காக மொழிகள் ஆய்வகம் துவக்கி வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.