-BY ஆர்.சிவக்குமார்
மதுரை:தமிழ்நாட்டில் பட்டியல் சமூகத்திற்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எஸ்சி/எஸ்டி உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பின் பிரதிநிதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அண்மை காலமாக தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிராகப் பல்வேறு தாக்குதல், கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சிறுவன் ஒருவர் ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்ட நிலையில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே வேப்பங்குளம் என்ற கிராமத்தில் இளைஞர் ஒருவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன் புல்லட் ஓட்டி வந்ததற்காக பட்டியல் இனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில், தமிழர் தேசியக் கழகம் கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான வையவன் மற்றும் அறிவுச்சமூகம் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான தமிழ் முதல்வன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினர்.
வையவன், தமிழ் முதல்வன் (ETV Bharat Tamilnadu) வழக்கறிஞர் வையவன் பேசும் போது, 'திமுக ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பட்டியல் சமூக மக்கள் மீதான வன்கொடுமைகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்து இளைஞர்களைக் குறி வைத்து படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது தற்போது அரசியல் தலைவர்களைக் கொலை செய்கிற அளவிற்கு உருவெடுத்துள்ளது. மதுரையில் ராமர் பாண்டியன், நெல்லையில் தீபக் பாண்டியன், சென்னையில் ஆர்ம்ஸ்ட்ராங் என கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண பட்டியல் சமூக இளைஞர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டு, போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற வன்கொடுமைகளைக் கண்காணிப்பதற்கு 'விழிக்கண் கண்காணிப்புக் குழு' ஒன்று மாநில மற்றும் மாவட்ட அளவில் இயங்கி வருகிறது. மாநில அளவில் முதலமைச்சர் தலைமையில் தான் அதன் ஆய்வுக் கூட்டம் நடைபெற வேண்டும் என்று இருந்தாலும் ஒரு முறை கூட முதல்வர் நேரடியாக அமர்ந்து ஆய்வு செய்ததில்லை. விழிக்கண் குழு முறையாக ஆய்வு செய்து, கூட்டங்கள் நடத்தியிருந்தால், இதுபோன்ற கொலைகளும், வன்கொடுமைச் சம்பவங்களும் குறைந்திருக்கும்.
ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பிறகு காவல்துறை வேகமாகச் செயல்பட்டது போன்ற தோற்றமிருந்தாலும், உண்மையிலேயே அதில் வேகம் இல்லை. பிற சமூக மக்களின் மனநிலையில் மாற்றம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.' என்றார்.
அறிவுச்சமூகம் அமைப்பின் தலைவர் தமிழ் முதல்வன் கூறுகையில், 'தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் 60க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் காளையன் என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். இதற்கான முழு ஆவணங்கள் இருந்தும் கூட அது எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழ் அந்த வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. உசிலம்பட்டி அருகே பட்டியல் சமூக சிறுவன் ஆதிக்க சாதி இளைஞர்களால் முகத்தில் சிறுநீர் கழித்து கொடுமைப்படுத்தப்பட்டுள்ளான். பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் மீதே காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதே போன்றுதான் வேங்கை வயல் கிராமத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் மீதே காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
சாதி ஆதிக்கவாதிகளும், அவர்களுக்கு ஆதரவான அமைப்புகளும் எந்தவிதமான வான்கொடுமைகளையும் செய்துவிட்டு தப்பித்துவிடலாம் என்ற அளவுக்கு அவர்களுக்கான ஆதரவு நிலையில் தமிழக அரசு உள்ளதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. இதில் திமுக, அதிமுக என்ற எந்த வேறுபாடும் இல்லை.' என்றார்.