மதுரை: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வில் பங்கேற்க வந்த 69 சந்தேகத்திற்கு இடமான நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும், இன்று அதிகாலை பித்ரு திருவிழா கூட்டத்தில் இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மோதிய சம்பவம் தொடர்பாக மதுரை மாநகர காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, “மதுரை மநாகரில் சித்திரைத்திருவிழா ஏப்ரல் 11ஆம் தேதி முதல் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில் கொடியேற்றத்ததுடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. திருவிழா பாதுகாப்பிற்காக வெளி மாவட்டங்களிருந்தும் மொத்தம் 4,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 4 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க தனியாக ஒரு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு, அதன் மூலம் வரப்பெற்ற தகவல்கள் உடனுக்குடன் பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளுக்கு பரிமாறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், திருவிழாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்காணித்து, குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாகவும், தனியாக 6 காவல் ஆய்வாளர்கள் தலைமையில், 400 பேர் கொண்ட 60 குழுக்கள் நியமிக்கப்பட்டு, திருவிழாவிற்கு குழுக்களாக வந்த 82 சந்தேக நபர்களைப் பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்களிடமிருந்து 26 கத்தி மற்றும் வாள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு, அதில் 69 நபர்கள் மீது காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட்டு, திருவிழா அமைதியான முறையில் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சமூக வலைத்தளங்களில் வந்த செய்தி தொடர்பாகவும், சிசிடிவி கேமரா மற்றும் ட்ரோன் கேமரா மூலமும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களை உடனுக்குடன் கண்டறிந்து, அவர்கள் மீது உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வானது, எவ்வித அசம்பாவிதமின்றி மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தவறான தகவல்களை மக்களிடையே சமூக வலைத்தளங்களின் மூலம் பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என அந்த குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:“இன்று நடைபெற்ற கொலைக்கும் சித்திரைத் திருவிழாவிற்கும் சம்பந்தமில்லை” - மதுரை மாநகர காவல்துறை விளக்கம்! - Madurai City Police