தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெயிலின் வறட்சியால் 40க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் உயிரிழப்பு.. நீலகிரியில் சோகம்! - Cattle died due to summer - CATTLE DIED DUE TO SUMMER

40 Country Cows Died In Nilgiris: நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி, தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறையால் மசினகுடி சுற்று வட்டாரப் பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More than 40 Country cows died due to drought in the Nilgiris
More than 40 Country cows died due to drought in the Nilgiris

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 2:50 PM IST

நீலகிரி: தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகி வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால், மாநிலத்தில் உள்ள பகுதிகளில் நிலவும் வெப்பநிலை அளவைப் பொறுத்து, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்து வருகிறது.

மேலும், எல் நினோ (El-Nino) மாற்றம் காரணமாக இந்த வெப்பம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரலாறு காணாத வறட்சியால் அனைத்து வகையான நீர் ஆதாரங்களும் வற்றிப் போய், ஆறுகள் மற்றும் அணைகளில் நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையில் நிலவும் நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறையால் வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர்த்து, வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள கால்நடைகளும் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரதான தொழிலாக கால்நடை வளர்ப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டு வரும் நிலையில், நிலங்கள் வறட்சியாகியதன் காரணமாக, கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு, குப்பைத் தொட்டிகளில் உள்ள உணவு கழிவுகளை உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது, தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதால், கால்நடைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு மெலிந்து காணப்பட்டன. நாள்தோறும், மசினகுடி சாலையில் உள்ள கல்குவாரிக்குச் செல்லும் கால்நடைகள் அங்கு குட்டையில் தேங்கி இருக்கும் தண்ணீரைக் குடித்து வந்ததாகவும், அங்கும் தண்ணீர் வற்றியதால் கால்நடைகள் தண்ணீரின்றி பரிதவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், கல்குவாரிக்குத் தண்ணீர் குடிக்க வந்த 40க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் உயிரிழந்துள்ளது. இந்த கல்குவாரி பகுதியில் கழுகுகள் ஏராளமாக சுற்றித் திரிவதால் உயிரிழந்த கால்நடைகளின் இறைச்சிகளைச் சாப்பிடுகின்றன. இதனால் உயிரிழந்த கால்நடைகள் எலும்பாக காட்சியளிக்கிறது.

இதுவரை இல்லாத அளவில் வெயிலின் தாக்கத்தால் கடும் வறட்சி நிலவும் மசினகுடி பகுதியில், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு கால்நடைகளுக்கு உணவு ,தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள மாடுகள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதால், கால்நடை உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் தீவனங்கள் மற்றும் கால்நடைகளுக்காக பொதுவான குடிநீர்த் தொட்டி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நாட்டு மாடுகளைக் காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மசினகுடி பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை முறையாக செயல்படாததால் அதிகப்படியான கால்நடைகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஊட்டி போறீங்களா.. அப்போ இத படிங்க.. நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details