சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குருப்-1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், துணை ஆட்சியர் - 16, துணை காவல் கண்காணிப்பாளர் - 23, உதவி ஆணையர் வணிக வரி - 14, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்-21, உதவி இயக்குனர்(ஊரக வளர்ச்சி)- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஒருவர் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஒருவர் என மொத்தம் 90 காலி இடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிட்டது.
தேர்வர்கள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 27ம் தேதி இரவு 11.59 மணி வரையில் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வினை எழுதுவதற்கு 2 லட்சத்து 38 ஆயிரத்து 255 நபர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களில் எட்டு பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 25 ஆயிரத்து726 ஆண்களும், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 501 பெண்களும் , மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் என 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் தேர்வினை எழுத உள்ளனர். இவர்களுக்காக 38 மாவட்டங்களிலும் 797 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் 124 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 38 ஆயிரத்து 891 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
பொதுஅறிவில் 175 கேள்விகளும், மனத் திறனை சோதிக்கும் வகையில் 25 கேள்விகளும் என 200 கேள்வி இடம் பெறும். இதற்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விமான டிக்கெட் புக்கிங்கில் மோசடி: மதுரையில் தவித்த நூறு பயணிகள்..! - flight booking scam