திருப்பத்தூர்:அசாம் மாநிலம் காச்சுவா நாஜோன் பகுதியைச் சேர்ந்தவர் வாசிம் அக்ரம் (27). இவர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்காகச் சென்றுள்ளார். அப்போது ரயிலில் அறிமுகமான ஒரு இளைஞர், விசிட்டிங் கார்டு கொடுத்து வேலை ஏதாவது வேண்டும் என்றால் போன் செய்யுமாறு கூறியுள்ளார்.
பின்னர் கேரளா சென்ற வாசிம் அங்கு வேலை ஏதும் கிடைக்காததால், விசிட்டிங் கார்டில் இருந்த நம்பருக்கு கால் செய்துள்ளார். அப்போது பேசிய நபர், 'தனது பெயர் தீபக் என்றும், நீங்கள் வந்தால் வேலை வாங்கித் தருகிறோம், ஒரு நாளைக்கு 700 ரூபாய் சம்பளம் என கூறியுள்ளார்.
மேலும், எங்களுக்கு அதிக அளவு ஆட்கள் தேவைப்படுவதால் உங்களுடன் யாரையாவது அழைத்துக் கொண்டு திருப்பத்தூர் வாருங்கள் எனக் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய வாசிம் அக்ரம், அவருடன் அமர் உசேன் (21), முபில் உசேன் (24), பொது ருகின் (19) ஆகியோரை அழைத்துக் கொண்டு கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி இரவு திருப்பத்தூர் வந்துள்ளார்.
கடத்தி பணம் பறிப்பு:அப்போது, 9 பேர் கொண்ட கும்பல் வாசிம் உள்ளிட்ட 4 நபர்களை காரில் ஏற்றிக்கொண்டு ஜோலார்பேட்டை அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் உள்ள தனி அறையில் அடைத்து வைத்து சரமாரியாகத் தாக்கி, அவர்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதற்கு பயந்து நான்கு பேரும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து, ஜிபே மூலம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளனர். மேலும், 4 பேரிடம் இருந்த ஏடிஎம் கார்டை பறித்து அதில் உள்ள பணத்தை எடுத்துக் கொண்டு, அவர்களை ஆம்பூர் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
மேலும் இது சம்பந்தமாக புகார் அளித்தால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டி உள்ளனர். எனவே, அசாம் இளைஞர்கள் புகார் அளிக்காமல் இருந்துள்ளார். இதே பாணியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முகமது அப்துல் அன்சாரி (27) உள்ளிட்ட 7 பேரிடம் ரூ.1.20 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்த 9 பேர் கொண்ட கும்பல், அவர்களையும் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே இருள் சூழ்ந்த இடத்தில் இறக்கிவிட முயன்றுள்ளனர்.
அப்போது காரில் இருந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரை, ஜார்கண்ட் மாநில இளைஞர்கள் பிடித்துள்ளனர். இதனைப் பார்த்த 8 பேர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து முகமது அப்துல் அன்சாரி, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தனிப்படை போலீசார் அதிரடி:இதனையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, தப்பியோடிய 8 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், கேரள மாநிலம் ராம்நாடு பகுதியில் அக்கும்பல் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து கேரளா விரைந்த தனிப்படை போலீசார், அங்கு பதுங்கி இருந்த நிஷாந்த் (27), பிரபு (29), பாலமுருகன் (25), பிரசாந்த் (26), பிரேம்குமார் (24), விஜய் (27) ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களை திருப்பத்தூர் அழைத்து வந்தனர். மேலும், அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேரிடம் ரூ.1.20 லட்சம் ரூபாயும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரிடம் ஒரு லட்சம் ரூபாயும் பணம் பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள இரண்டு நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:பெண் காவலரை பிளேடால் வெட்டிய வாலிபர்கள்..சென்னையில் துணிகரம்!