தஞ்சாவூர்:கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு வீதியைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் திருபுவனம் காங்கேயன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் ஆகிய இருவரும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்களில் வேலைவாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர்.
இதனை நம்பி 15 நபர்கள், தலா மூன்று லட்சம் வீதம் 45 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மாரியப்பன் என்பவர் பணத்தை பெற்றுக்கொண்டு அடையாள அட்டை மற்றும் பணி நிரந்தர ஆணை உள்ளிட்டவற்றைக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு போக்குவரத்து பணியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பணி நியமன ஆணை பெற்றதாகக் கூறப்படும் 10-க்கும் மேற்பட்டோர், அரசு போக்குவரத்துக் கழகத்திற்குச் சென்று, தாங்கள் மூன்று லட்சம் வரை பணம் கொடுத்துப் பணி ஆணை மற்றும் அடையாள அட்டை உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளோம். எனவே, தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இதனைப் பார்த்த போக்குவரத்து அலுவலகர்கள், ஆவணங்கள் அனைத்தும் போலியானவை எனத் தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டோர், மாரியப்பன் மற்றும் சந்தோஷ் ஆகியோர் தொடர்பு கொண்டு இதுகுறித்துக் கேட்டபோது, சரிவர பதிலளிக்காமல் இருவரும் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் மாரியப்பன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் கண்டுபிடித்து திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் திருவிடைமருதூர் போலீசார், இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தமிழர்களை தவறாக சித்தரிக்கிறதா மஞ்சுமல் பாய்ஸ்? - வசனகர்த்தா பிரத்யேக பேட்டி