திண்டுக்கல்:திண்டுக்கல்லில் அதிமுக தொண்டர்கள் மீட்பு உரிமைக்குழு நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (ஜன. 28) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அபகரிக்கப்பட்ட அதிமுகவை மீட்டு விரைவில் கோட்டையில் கொடியேற்றுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், இந்தியா கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட போது நிருபர்கள் என்னிடம் கேட்டனர். அப்போதே நான் கூறினேன், அது ஆண்டிகள் இருக்க கூடிய மடமாகத்தான் முடியும் என்று அப்போதே கூறினேன். எடப்பாடி பழனிசாமி தலைமையில் எந்த குழுவும் அமைக்கப்பட முடியாது. எந்த குழுவாக இருந்தாலும் அந்த குழு டம்மி குழு. அவர்கள் எந்த நேரத்திலும் வெற்றி பெற முடியாது.
அது இப்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டு காலம் இந்திய திருநாட்டை, மிக வலிமையோடு, 20 மேலை நாடுகள், முன்னேறிய நாடுகள் எல்லாம் பாராட்டக்கூடிய வகையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்திய நாட்டை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க கூடிய முக்கிய தேர்தல். இந்த தேர்தலிலும் 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி தந்த பிரதமர் மோடி தான் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு நல்ல கருத்து இந்தியா முழுமைக்கும் வலுப்பெற்று இருக்கிறது.