திருப்பூர்:தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் ஒருபகுதியாக, திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய கமல்ஹாசன், "அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். இதை 'குரோதி' ஆண்டு என்று சொல்கிறார்கள். குரோதம் இல்லாத ஆண்டாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. ஒருவேளை குரோதம் இருக்க வேண்டும் என்றால், அது சாதியைப் பற்றிய குரோதமாக இருக்க வேண்டும்.
ஒரு திருப்பூரையே கவனிக்காத நிலையில் எங்கிருந்து 75 திருப்பூர்?:காந்தி சுதேசி இயக்கத்தைத் தொடங்கியபோது, நமது ஆடைகளை நாமே தயாரிக்க வேண்டும் என்றார். அவரது கருத்தை முழுவதுமாக உள்வாங்கிய ஊர், திருப்பூர். இங்கு தற்போது ஜவுளித் தொழில் மந்தமாகியுள்ளது. ஜிஎஸ்டி, பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றால் தொழிலில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது.
மந்த நிலையிலேயே இந்த அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது என்றால், 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும்?. ஜவுளித்துறையில் சாதித்த திருப்பூரை, கடந்த 10 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கு இழுத்து வந்துள்ளனர். திருப்பூரைப் போல, 75 தொழில் நகரங்களை உருவாக்குவேன் என்கிறார், ஒன்றிய அமைச்சர். ஒரு திருப்பூரையே சரியாக கவனிக்காத நீங்கள், எங்கிருந்து 75 நகரங்களை உருவாக்கப் போகிறீர்கள்?.
ஆனால், 2 முறை எம்.பி., 2 முறை எம்எல்ஏவாக இருந்துள்ள சுப்பராயன், தனது 19 வயது முதலே மக்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். எனது 'அன்பே சிவம்' படத்தின் நாயகனுக்கு முன்மாதிரியாக அமைந்தவர்கள் 'சுப்பராயன்' போன்ற தோழர்கள்தான். அவரைப் போன்றவர்களைக் கருத்தில் கொண்டுதான் அந்தப் படத்தில் 'நல்லசிவம்' என்ற கதாபாத்திரத்தையே உருவாக்கினேன்.
ஜனநாயகம் வேறு, கம்யூனிசம் வேறு இல்லை:எனக்கு 18 வயது முதலே பொதுவுடைமை சித்தாந்தத்தில் ஈர்ப்பு உண்டு. ஜனநாயகம் வேறு; கம்யூனிசம் வேறு என்று மாயையைக் கற்பித்துள்ளார்கள். உண்மையில் இரண்டின் நோக்கமும் மக்கள் நலன் மட்டும்தான். சித்தாந்தத்தில் மட்டும் கொஞ்சம் வேறுபாடு இருக்கும். இந்த வேறுபாடு கூட எங்களுக்கு இல்லை. மக்கள் நீதியே, மக்கள் நீதி மய்யத்தின் நீதி. தான் செய்ததைச் சொல்லிக் கொண்டு வருபவரை நம்பலாம். ஆனால், செய்யாததை சொல்லுபவர்களையும், செய்வதாகப் பொய் சொல்லுபவர்களையும் நம்பக்கூடாது. கருணாநிதி சொன்னதைச் செய்தவர், செய்ததை மட்டுமே சொன்னவர்.
ஜிஎஸ்டியால் பின்னுக்குத் தள்ளப்பட்ட திருப்பூர்: இந்தியாவில் ஜிஎஸ்டி கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெற்றபோதே, அதை எதிர்த்து திரைத்துறையிலிருந்து குரல் எழுப்பியது, நான் மட்டும்தான். ஜிஎஸ்டி, பண மதிப்பு இழப்பு போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள வேண்டும் என்றால், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும்போது, நன்கு யோசித்து வாக்களிக்க வேண்டும். ஜிஎஸ்டியை நல்ல திட்டம் என்று ஒன்றிய அமைச்சர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் கூறுகின்றனர். அப்படியானால், வாக்கு கேட்டு வந்தபோது, ஜிஎஸ்டியால் நாடு செழித்திருக்கிறது என்று கூறாதது ஏன்?
ஜிஎஸ்டியால் பெட்ரோல் விலை உயர்வு, பஞ்சு விலை உயர்வு, நூல் தட்டுப்பாடு உள்ளிட்டவை உலகில் முதல் நிலையை நெருங்கிக் கொண்டிருந்த திருப்பூரைப் பின்னுக்கு இழுத்து வந்துவிட்டன. ஜவுளித்துறையில் நமக்குப் பின்னால் இருந்த வங்காளதேசம், இப்போது நம்மை முந்திவிட்டது. அங்கு வரி, பெட்ரோல் விலை போன்றவை குறைவு. அதுமட்டுமல்ல, வங்காளதேசத்தில் இருந்து நூல், துணி போன்றவற்றை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் கொடுமையும் நடக்கிறது.
இவ்வாறு மக்களுடன் ஒன்றிச் செல்லாத ஒன்றிய அரசிடமிருந்து மீளவேண்டுமெனில், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். நான் எனக்காகக் கேட்கவில்லை, நமக்காகக் கேட்கிறேன். இதைச் செய்தால், நிச்சயம் நாளை நமதாகும்" எனத் தெரிவித்தார். முன்னதாக, திருப்பூர் நகரைப் போன்று நாடுமுழுவதும் 75 ஜவுளி, ஆயத்த ஆடைகள் முனையங்கள் அமைக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ''பாஜக ஆட்சிக்கு வந்தால் 75 ஆண்டு தமிழகத்தின் சுயமரியாதை, சமூக நீதி பின்னுக்குத் தள்ளப்படும்'' - கார்த்திக் சிதம்பரம் எச்சரிக்கை! - Lok Sabha Election 2024