புதுக்கோட்டை: அருந்ததியினருக்கான 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வரவேற்றுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு சார்பில் சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழி பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது? என்னென்ன பணிகள் முடிவடைந்துள்ளது என்பது குறித்து, தமிழ்நாடு அரசு சட்டமன்ற உறுதிக்குழு தலைவர் வேல்முருகன் ஆய்வு செய்ய வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீட்டை வரவேற்கிறோம் என்றார்.
மேலும், சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க மாநில அரசு தயங்கவில்லை.. முழு விவரப்பட்டியல் மத்திய அரசு கையில் இருப்பதால், மத்திய அரசுதான் இதை செய்ய வேண்டுமென மாநில அரசு கூறுகிறது. இருப்பினும், பீகார், ஆந்திர மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இதுவரை தமிழக முதல்வர் அதனை மறுக்கவில்லை என வேல்முருகன் கூறினார்.