கோயம்புத்தூர்: பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க மகளிர் பிரதிநிதிகள் மாநாடு, வடக்கிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே, இந்த மகளிர் பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தின் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. அதில் மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு நிதி மத்திய அரசு கொடுத்திருக்கிறது என்பதை இந்த அரசு வெளிப்படையான அறிக்கையை கொடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாகும்.
கிராமப்புறங்களில் இருக்கின்ற விவசாயிகளுடைய வங்கிக் கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது. முத்ரா திட்டத்தில் அதிகமாக கடன் பெற்று இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள்தான். ரேஷன் கடைகளிலே இலவசமாக அரிசியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதைப் பற்றி எல்லாம் பேச மாட்டேன் என்கிறார்கள்.