திருச்சி:கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட சிவாஜி கணேசன் சிலை இன்னும் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலை, சிலையை நிறுவுவதற்கான மாற்று இடம் குறித்து கேட்டறிய, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சிலையை நிறுவ சரியான இடத்தை தேர்வு செய்யுமாறு திருச்சிகிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று (மே 20) மனு அளித்துள்ளனர்.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் சிலை அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் கடந்த 2011 ம் ஆண்டு 9 அடி உயர சிலை நிறுவப்பட்டது.
ஆனால் நிறுவப்பட்ட சிலை அதே இடத்தில் 13 ஆண்டுகளாக சாக்குப் பையால் மூடப்பட்ட நிலையில் இருந்து வருகிறது. இதற்கிடையே, சிலையை திறக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் திருச்சியை சேர்ந்த மோகன் பாலாஜி என்ற ரசிகர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சிலை நிறுவப்பட்டிருக்கும் சாலையில் சிலையைத் திறக்க அனுமதி அளிக்க முடியாது எனக் கூறியது.
மேலும் மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில், சிலையை இப்போது நிறுவப்பட்டிருக்கும் இடத்திலிருந்து அகற்றி, வேறொரு முக்கிய சந்திப்பில், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று, குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருச்சியில் எந்த இடத்தில் சிலை வைக்கலாம் என்பது குறித்து கேட்டறிய, நீதிமன்றம் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு தற்போது உத்தரவிட்டுள்ளது.