சென்னை:இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து, அவர்களது படகுகளை பறிமுதல் செய்து வைத்துக்கொள்ளும் நிகழ்வு தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.29) மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், “இராமேஸ்வரம் மீன் பிடித்தளத்திலிருந்து IND-TN-10-MM-411 மற்றும் IND-TN-10-MM-544 பதிவு எண்களைக் கொண்ட இரண்டு படகுகளில் 28.09.2024 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்து நிலையில், இன்று (29.09.2024) நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடலோர பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்தினரிடையே மிகுந்த துயரம் அடைய செய்வதோடு அவர்களது வாழ்வை நிச்சயமற்றதாக மாற்றுகிறது.