சென்னை:6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், முதல் முறையாக தமிழகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டு, கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் தொடக்க விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும், இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த கேலோ இந்தியா போட்டியானது, தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெற்றது.
அந்த வகையில், தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதோடு, தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உள்பட மொத்தம் 27 விளையாட்டுகள் காட்சி விளையாட்டுகளாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் நிகழ்த்திய சாதனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில், “பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தியதன் வாயிலாகவும், அண்மையில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் வாயிலாகவும் தமிழ்நாடு, இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராகவும் மற்றும் உலகளாவிய விளையாட்டு மையமாகவும் தனது நிலையை உறுதிப்படுத்தி உள்ளது" என்று கூறியுள்ளார்.
மேலும், "இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 போட்டியில், தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தமாக 98 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட சாம்பியன்கள் நிகழ்த்திய சிறப்பான சாதனையானது, முதன் முறையாக குறிப்பிடத்தக்க வெற்றியைக் குறிக்கிறது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை எவ்விதத்திலும் குறைபாடற்ற முறையில் நடத்தியதற்காக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். நமது திறமையான விளையாட்டு வீரர்கள் நிகழ்த்திய இந்த சாதனை, எதிர்கால நட்சத்திரங்களை உருவாக்கிட வழிவகுப்பதாய் அமைந்துள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:"எனது வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன்" - விபத்து குறித்து மனம் திறந்த ரிஷப் பண்ட்!