திருச்சி:தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்குகின்றார்.
அந்த வகையில், தேர்தல் பிரச்சாரத்தில் முதல் பொதுக்கூட்டம் நாளை திருச்சியில் நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியின், திராவிட முன்னேற்றக் கழக பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேருவை ஆதரித்தும், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்தும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி, மதிமுக நிறுவனத் தலைவர் வைகோ ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தலைமை உரையாற்றுகிறார். பின்னர், திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.