சென்னை: சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், "ஐம்பெரும் விழா" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசுப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளையும், தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு டேப் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் நூறு மதிப்பெண் எடுத்த மாணவர்கள் 43 பேருக்கும், பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 1,761 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும், 67-வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற 409 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், "பள்ளிக்கல்வித் துறை நிகழ்ச்சிகளில் பொதுவாகவே நான் ஆர்வத்துடன் கலந்துகொள்வது வழக்கம். ஆனால், என்னை விட அதிகமாக கலந்துகொள்ளும் ஒருவர் இருக்கிறார். இந்த மேடையில் இருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி. அதனால், இந்த முறை நான் முன்பே, ரிசர்வ் செய்துவிட்டேன். பள்ளி மாணவர்களான உங்களை பார்க்கும்போது, எனக்கும் இளமை திரும்பி ஆற்றல் வந்துவிடுகிறது.
பொதுவாக, அரசியல் மேடைகளில்தான் ஐம்பெரும் விழாக்கள், முப்பெரும் விழாக்களை நடத்துவோம். ஆனால், இப்போது பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஐம்பெரும் விழா ஏற்பாடு செய்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
ஆகஸ்ட் முதல் தமிழ்ப்புதல்வன் திட்டம்: 'புதுமைப்பெண்' திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதா மாதம் ரூ.1,000 ஆயிரம் வழங்குவதால், அவர்கள் சிறிய சிறிய தேவைகளுக்கு யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை இல்லை என்றும், இந்த திட்டம் தங்களின் தேவைக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்கள். அந்த மகிழ்ச்சியை மாணவர்கள் முகத்திலும் பார்க்க வேண்டும் என்பதற்காக மாதம் ரூ.1,000 வழங்குகின்ற "தமிழ்ப்புதல்வன் திட்டம்" செயல்படுத்தப்படும் என்று சொல்லியிருந்தேன். அதன்படி, வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
எந்த பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்தாலும் பாராட்டுக்குரியதுதான். ஆனால், நம்முடைய தாய்மொழி தமிழ். அதுவும், உயர்தனிச் செம்மொழி என்பதால், அதில் 100 மதிப்பெண் பெற்றவர்கள் சிறப்பான பாராட்டுக்குரியவர்கள். தற்போது, 12ம் வகுப்பில் 35 பேரும், 10ம் வகுப்பில் 8 பேரும், தமிழ்ப்பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றிருக்கின்றனர். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தேசிய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டு 95 தங்கப் பதக்கங்களையும், 112 வெள்ளிப் பதக்கங்களையும், 202 வெண்கலப் பதக்கங்களையும் மாணவர்கள் வெற்றுள்ளனர். பதக்கம் பெற்றவர்கள், அடுத்து உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்கவேண்டும்.