தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"16 பிள்ளைகளை ஏன் பெறக் கூடாது?" கேள்வி எழுப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மக்கள் தொகை குறைவாக இருப்பதால் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் எனில் 16 பிள்ளைகளை பெற வேண்டும் என ஏன் வாழ்த்தக் கூடாது என்ற நிலை இன்று வந்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

Updated : 14 minutes ago

MK Stalin
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credit - ETV Bharat)

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்.21) சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 31 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.

பின்னர் விழா மேடையில் பேசிய முதலமைச்சர்,"தம்பதியர்கள் இன்றைக்கு மணவிழாவை முடித்திருக்கிறீர்கள். நீங்கள் மணவிழாவை முடித்து உங்களுடைய செல்வங்களை பெற்றுக்கொள்ள இருக்கிறீர்கள். முன்பெல்லாம் செல்வங்கள் என்று சொல்கின்றபோது 16 பெற்று பெறுவாழ்வோடு வாழவேண்டும் என்று சொல்வார்கள். 16 என்றால் 16 குழந்தைகள் அல்ல. 16 செல்வங்கள். இதனை கி.ஆ.பெ. விசுவநாதம் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

16 செல்வங்கள்: 16 செல்வங்கள் என்பது மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், போகம், புகழ் ஆகியவை தான் 16 செல்வங்கள். அந்த 16 செல்வங்களை பெற்று வாழுங்கள் என்று தான் அன்றைக்கு வாழ்த்தினார்கள். இப்போது யாரும் 16 செல்வங்களை பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துவது கிடையாது. அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்றுதான் சொல்கிறோம்.

இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் நாடாளுமன்றத் தொகுதிகள் குறைந்தால் ஏன் 16 பிள்ளைகளை பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற நிலை வந்திருக்கிறது. நம்முடைய மணமக்களை நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்படிப்பட்ட உணர்வோடு உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழுங்கள்" என்றார்.

மக்கள் தொகையால் என்ன பிரச்சனை?: கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுவதை முக்கிய பிரச்சனையாக தி.மு.க. கையாண்டது. இது தொடர்பாக அப்போது அறிக்கை வெளியிட்டிருந்த மு.க.ஸ்டாலின்,2026ம் ஆண்டு மக்கள்த் தொகை கணிப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையரை செய்வதால் தமிழ்நாட்டிலுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பதை குறிப்பிட்டிருந்தார்.

"மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாகச் செயல்பட்டதற்காக மாநிலத்தை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?" என மு.க.ஸ்டாலின் தமது பதிவில் கேள்வி எழுப்பியிருந்தார்.

மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைவது, மாநிலத்தின் செல்வாக்கை குறைக்கும் எனவும் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்திருந்தார். முன்னதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் மாநிலத்தில் மக்கள் தொகை குறைவது பற்றி கவலை தெரிவித்திருந்தார். இது பற்றி அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "ஆந்திர பிரதேசத்தில் வயதானவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருப்பதால் அதன் விளைவுகளை மாநிலம் எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது" என கூறியுள்ளார். எனவே 2 அல்லது அதற்கு மேல் குழந்தை பெற்றவர்களுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தல்களில் வாய்ப்பு வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர உள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதே போன்ற கருத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் முன்மொழியத் தொடங்கியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : 14 minutes ago

ABOUT THE AUTHOR

...view details