சென்னை:விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,169 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " டைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நாற்பது தொகுதியிலும் நாற்பதுக்கு நாற்பது என்ற நூறு விழுக்காடு வெற்றியை திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணி பெற்றது.
சாதாரண வெற்றியல்ல, பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியைப் பெற்றோம். அதிமுக கூட்டணி படுதோல்வியை அடைந்தது. பாஜக கூட்டணி பாதாளத்தில் விழுந்தது. இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொண்டோம்.
விக்கிரவாண்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய புகழேந்தி உடல்நிலை காரணமாக மறைவையொட்டி இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பாமக மர்மம் விலகவில்லை:நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வியில் எழ முடியாமல் இருந்த அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதே படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியிலிருந்து பின்வாங்கியது. பாஜக, தனது அணியில் இருக்கும் பாமகவை நிறுத்தியது. 'இடைத்தேர்தலிலேயே நிற்பது இல்லை' என்று வைராக்கியமாக இருந்த பாமக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை. தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி.
அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 விழுக்காடு தோல்வியை மறைப்பதற்காக மிகக் கீழ்த்தரமான பரப்புரையை பாஜக அணி செய்தது. பொய் வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்.