சென்னை:உலக முதலீட்டாளர்கள் மாநாடு அண்மையில் சென்னையில் நடைபெற்று நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக முதலமைச்சர் மு க ஸ்டாலின், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு 8 நாள் பயணமாக இன்று சென்னையில் இருந்து புறப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “திராவிட மாடல் அரசின் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டிவிடும் முயற்சிகளில், 2024-ஆம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று பயண நாட்கள் தவிர்த்து 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். பிப்ரவரி 7 ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறேன்.
என்னுடைய கடந்தகால வெளிநாட்டுப் பயணங்களைப் பொறுத்தவரை, கடந்த 2022-ஆம் ஆண்டு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஐக்கிய அரபு நாடுகள் சென்றிருந்தேன். அந்தப் பயணத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதேபோல, 2023-ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்குச் சென்றதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆயிரத்து 342 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த இரண்டு பயணங்கள் மூலமாக, 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 7 ஆயிரத்து 442 கோடி ரூபாய்க்கான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வேகமாகச் செயல்வடிவம் கொடுத்ததால் பல நிறுவனங்கள், தங்களின் தொழிற்சாலைகளைத் தமிழ்நாட்டில் நிறுவத் தொடங்கியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த ஓம்ரான் மற்றும் மிட்சுபிஷி போன்ற நிறுவனங்கள், தங்களின் தொழிற்சாலைகளை நிறுவத் தொடங்கிவிட்டார்கள்.