சென்னை:கடந்த மூன்று ஆண்டுகளில் 20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது எக்ஸ் பதிவில், திராவிட மாடல் அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி!
20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி, 519.73 கோடி ரூபாயில் உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள், 22,931 'Smart' வகுப்பறைகள், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு. நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது! பயணத்தைத் தொடர்வோம்! தமிழ்நாட்டை உயர்த்துவோம்!'' என கூறியுள்ளார்.
மேலும், தமிழக அரசின் புதுமை பெண் திட்டம் தொடர்பாக வெளியான செய்தியையும் பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இப்பதிவினை போட்டுள்ளார். அந்த செய்தியில் '' அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவியரின் உயர் கல்விச் சேர்க்கை விகிதம் குறைந்தது, உயர் கல்வி பயில இயலாத மாணவியர் திருமணம் செய்விக்கப்பட்டது போன்ற அவலங்களுக்கு முடிவுகட்டும் வகையில், ஒரு புதிய திட்டத்தைத் தமிழ்நாடு அரசு 2022இல் அறிவித்தது.
அதுவரை பெண்களின் திருமணத்துக்காகச் செயல்படுத்தப்பட்டுவந்த நிதியுதவித் திட்டத்தை, 'மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டமாக (புதுமைப் பெண் திட்டம்) மாற்றி அறிவித்தது. அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற பெண்களின் உயர் கல்விக்காக மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தும் திட்டத்தை செப்டம்பர் 2022 முதல் தமிழக அரசு செயல்படுத்திவருகிறது. அந்தத் திட்டத்தின்கீழ் 2.73 லட்சம் மாணவியர் பயன்பெற்றுவருவதாக அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காகவும் போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவற்றுக்கு அவர்களைத் தயார்செய்யும் வகையிலும் 'நான் முதல்வன்'என்னும் வழிகாட்டித் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 27 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதோடு, தொழில் வழிகாட்டி மூலம் 1.9 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகக் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.1,000 கோடி செலவிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இளம் தலைமுறையினரின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பெண்களின் உயர் கல்விக்காகவும் தமிழக அரசு செயல்படுத்திவரும் திட்டங்களால் உயர் கல்வியில் சேரும் மாணவர் விகிதம் 49 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது நாட்டின் தேசிய சராசரி சேர்க்கை விகிதத்தைப் போல் இரண்டு மடங்கு'' என குறிப்பிட்டிருந்தது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க ராமதாஸ் வலியுறுத்தல்!