சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உங்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு மிகமிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மிகமிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னும் சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் என்ற முறையில் இன்னும் பெருமையாக இருக்கிறது.
நாற்பதுக்கு நாற்பது என்று சொல்லி பரப்புரை பயணத்தை நான் தொடங்கினேன். நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியை அடைந்து விட்டோம். இந்த வெற்றி என்பது சாதாரணமான வெற்றி அல்ல. 2004ஆம் ஆண்டு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தலைவர் கலைஞர் நமக்கு பெற்றுத் தந்த வெற்றி இது. அந்த வெற்றியை நாம் பெற்றுள்ளோம்.
சாதனை:இப்போது நாம் அடைந்துள்ள வெற்றிக்கு மிக முக்கியமான சிறப்பு உண்டு. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் 39 தொகுதிகளைத்தான் கைப்பற்ற முடிந்தது. ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த தேர்தலில் அந்த ஒன்றையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது வென்றுவிட்டோம். இரண்டாவது தேர்தலில், முழுமையான வெற்றியைப் பெறுவது என்பது சாதாரணமான சாதனை அல்ல, வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாகும்.
வேண்டுகோள்:இந்தச் சாதனை வரலாற்றில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதுதான் உங்களுக்கு உள்ள பெருமை. நாடாளுமன்றத்தில் அதிக அனுபவம் கொண்ட டி.ஆர்.பாலு முதல், முதல் முறையாக எம்.பியாகும் பலரும் இங்கு இருக்கிறீர்கள். மிகமிகக் குறைந்த வயதில் அருண் நேரு பெரம்பலூர் எம்பி ஆகியுள்ளார். வெற்றி பெறுபவரே வேட்பாளர் என்ற அடிப்படையில் தான் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. உங்களுக்கு இத்தகைய பெரிய வாய்ப்பை அளித்த கட்சிக்கும், உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்மையாக இருங்கள். இதுதான் திமுக தலைவர் என்கிற முறையில் நான் வைக்கும் வேண்டுகோள்” என்றார்.
மேலும், “திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கொள்கைக் குடும்பத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி செல்லும் நீங்கள், என் பெயரையும் திமுகவின் பெயரையும் காப்பாற்ற வேண்டும். ஒரு சில மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் லேசாக மாறி இருந்தால் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும். அதேநேரத்தில், மிகப்பெரிய பெரும்பான்மையை மட்டுமல்ல, ஆட்சி அமைக்கத் தேவையான அளவுக்கு செல்வாக்கைக்கூட பாஜக அடையவில்லை.
வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்:370 தொகுதிகளில் வெற்றி பெறுவோம், 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி 240க்கு இறங்கி விட்டது பாஜக. இந்தச் சூழலில் நாம் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து வாதாட வேண்டும், போராட வேண்டும். ஏராளமான வாக்குறுதிகளை நாம் மக்கள் மன்றத்தில் வைத்தோம். அவை அனைத்தையும் நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து அதனைச் செயல்பட வைக்க வேண்டும். பலவீனமான பாஜக அரசை, நம்முடைய முழக்கங்களின் மூலமாகச் செயல்பட வைக்க வேண்டிய கடமை உங்கள் அனைவருக்கும் உள்ளது” என்றார்.
234 உறுப்பினர்கள்: தொடர்ந்து பேசிய அவர், “நமது கட்சியின் தேர்தல் அறிக்கையைப் படியுங்கள். திமுகவின் கடந்தகால நிலைப்பாடுகளை உணர்ந்து, தெரிந்து உரையாற்றுங்கள். நாடாளுமன்ற விவாதங்களைப் படியுங்கள். நாடாளுமன்றத்துக்குத் தவறாமல் போக வேண்டும். கடந்த முறை எதிர்க்கட்சி வரிசையில் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால், இந்த முறை 234 உறுப்பினர்கள் இருக்கப் போகிறார்கள்.