தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"40க்கு 40 வெற்றி அதிமுகவினரின் கண்ணை உறுத்துகிறது" - மு.க.ஸ்டாலின் தாக்கு! - MK STALIN SPEECH IN TN ASSEMBLY

CM Stalin Spoke About EPS In Assembly: சட்டப்பேரவையில் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவினர் திட்டமிட்டு செயல்படுவதாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மு க ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி புகைப்படம்
மு க ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 2:35 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஜூன் 25) காலை கூடியதும் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுகவினர் முழக்கமிட்டனர். சபாநாயகர் அனுமதி மறுக்கவே அவரை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக விளக்கம் அளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, கடந்த 21ஆம் தேதி ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இந்த அவையில் விரிவாகப் பேசியிருக்கிறார்கள். அதற்கு நானும் விரிவான பதிலைத் தெரிவித்துள்ளேன்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆற்றிய உரை (Credits - ETV Bharat Tamil Nadu)

அன்று, முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தனது கருத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக தேவையற்ற பிரச்சனையை அவை கூடியதும் கிளப்பினார்கள். அவையினுடைய விதிமுறைப்படி, கேள்வி நேரம் முடிந்த பிறகுதான் மற்றவற்றை பற்றி விவாதிக்க வேண்டும். ஆனால் விதிமுறையை மீறி, உடனடியாக கள்ளக்குறிச்சி பிரச்சனையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இங்கே ஒரு பெரிய ரகளையை செய்துள்ளார்கள்.

கேள்வி பதில் நேரம் முடிந்ததும் கள்ளக்குறிச்சி பிரச்சனையை பற்றித்தான் விவாதிக்கப் போகிறோம் என்று சட்டப்பேரவை தலைவர் தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லியும், அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு, ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக அப்படி நடந்து கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில்தான் சட்டப்பேரவை தலைவர், அவர்களை அவையில் இருந்து வெளியேற்றினார். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் நான் அவைக்கு வந்தேன். வந்ததும், இந்த சம்பவம் குறித்து அறிந்த நான், 'மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்போது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அவையில் இருக்க வேண்டும்' என்று மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் சட்டப்பேரவை தலைவரிடம் கோரிக்கை வைத்தேன்.

கலவரம் உருவாக திட்டமிடுகிறார்கள்: அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பேரவை தலைவர், அதிமுகவினரை அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள அனுமதித்தார். ஆனால், அதற்கு பிறகும் அதையும் ஏற்றுக்கொள்ளாமல், மீண்டும் இந்த அவையில் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு இப்படிப்பட்ட காரியத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதிமுகவிற்கு உறுத்தும் திமுகவின் 40-க்கு 40 வெற்றி:இதற்கு காரணம், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40 க்கு 40 வெற்றிபெற்றது, அவர்களுடைய மனதையும், கண்ணை உறுத்துகிறது. அதை மக்களிடம் இருந்து எப்படி மாற்றுவது என்பதற்காக இப்படி திட்டமிட்டு கலவரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கள்ளச்சாராய விவகாரம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தபோது, அதற்கு என்னென்ன பரிகாரம் செய்யப்போகிறோம் என்பதைப் பற்றியெல்லாம் நான் தெளிவாக சொல்லியிருக்கிறேன். அதன்படி, கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையானக் காரணத்தை அறிய நீதியரசர் கோகுல்தாஸ் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோரை ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லி இருக்கிறேன்.

இதுமட்டும் அல்லாது, 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், பலர் தேடப்பட்டு வருகிறார்கள். கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. மேலும், இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்க்கை பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டுள்ளார், மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். மதுவிலக்கைக் கவனித்து வந்த ஏ.டி.ஜி.பி கட்டாயக் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இப்படியாக அனைத்து நடவடிக்கைகளையும் 24 மணி நேரத்தில் இந்த அரசு மேற்கொண்டுள்ளது" என்று பேசியுள்ளார்.

இதையும் படிங்க:அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு கோரிய முதல்வர்.. நெகிழ்ந்த சபாநாயகர்.. ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details