சென்னை: ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஏற்கனவே ஊழல் புகாருக்கு ஆளான எதிர்கட்சி பிரமுகர், திடீரென பா.ஜ.க. பக்கம் சென்றுவிட்டால் உடனே அவரை புனிதராக்கி, அமைச்சர் பதவி கொடுக்கும் அளவிற்கு கறை நீக்கக்கூடிய ‘அற்புத வாஷிங் மிஷின்’ பா.ஜ.க.விடம் இருக்கிறது” என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
இந்த பேட்டியின் போது, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித் துறை போன்ற விசாரணை அமைப்புகள், மத்திய அரசின் அரசியல் கருவிகளாக மாறி வருவதையும், அது இந்தியா ஜனநாயகத்தைச் சிதைப்பதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது அந்த கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர், "அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை போன்ற சுதந்திரமான விசாரணை அமைப்புகளை மத்திய பாஜக அரசு தன் கைப்பாவையாகப் பயன்படுத்துகிறது என்பதை எதிர்கட்சிகளான நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டியது இல்லை. மக்களே அதைச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
பாஜக ஆட்சியல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சியினர் மீதுதான் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாய்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள ஊழல் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஏற்கனவே ஊழல் புகாருக்கு ஆளான எதிர்கட்சி பிரமுகர் திடீரென பாஜக பக்கம் சென்றுவிட்டால் உடனே அவரை புனிதராக்கி, அமைச்சர் பதவி கொடுக்கும் அளவிற்குக் கறை நீக்கக்கூடிய 'அற்புத வாஷிங் மிஷின்' பாஜக-விடம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டு விட்டார்கள்.