திருவள்ளூர்: அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி அரசு உதவிபெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இல்லாத கற்பனைக் கதைகளுக்கு வடிவம் கொடுப்பதையும், ஈரைப் பேனாக்கும் வேலையைச் செய்பவர்களுக்கும் நம்மைப் பாராட்டுவதற்கு மனமில்லை, அதைப் பற்றி நமக்கு கவலையுமில்லை. எந்தவொரு சிறு பிரச்னை நடந்தாலும் நம்முடைய அரசு உடனடியாக அதை கவனத்தில் எடுத்து, அதை தீர்த்து வைக்கின்றது.
எந்த விவகாரத்திலாவது நம்முடைய அரசு செயல்படாமல் தேங்கி நின்றிருக்கிறதா, இல்லை. நாள்தோறும் மக்களுக்கான நலத்திட்டங்கள், தமிழ்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்குத் தேவையான செயல்பாடுகள் என்று நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டு, இயங்கிக்கொண்டு தான் இருக்கிறோம்.
பொய்ச் செய்திகள் மூலம் ஒரு சில கருத்துருவாக்கங்களை உருவாக்கி, அதில் குளிர் காயலாம் என்று நினைக்கின்ற அந்த மக்கள் விரோத சக்திகளுடைய அஜெண்டா எந்த காலத்திலும் நடக்காது. ஏனென்றால், ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறக்கூடிய வகையில் மக்கள் நலத் திட்டங்களைப் பார்த்து பார்த்து செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
திராவிட மாடல் அரசையும், என்னையும் பொறுத்தவரைக்கும் நம்முடைய தமிழ்நாட்டு பசங்க படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்க கூடாது என்று நினைக்கிறோம். அது பசியாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையாக இருந்தாலும் சரி, எந்த தடை வந்தாலும் அந்த தடைகளை உடைப்பதுதான் எங்களுடைய முதல் பணி.