வேலூர்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, கடந்த மார்ச் 14ஆம் தேதி வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் என்ன காரணம் என்று வெளியில் சொல்லப்படாத நிலையில், உயர் ரக சிகிச்சை அளிக்கக்கூடிய வார்டில் தொடர்ந்து துரை தயாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அந்த வார்டில் துரை தயாநிதிக்கென்று தனி மருத்துவக் குழு ஒதுக்கப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுமட்டுமல்லாது, மருத்துவமனையின் ஏ பிளாக்கில் பிசியோதெரபி சிகிச்சையும் பெற்று வந்தார். அவருடன் அவரது தந்தை மு.க.அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து அவரை கவனித்து வந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்த தளம் முழுவதும் காவல் துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.