விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சி அருகே அமைந்துள்ள கூவாகம் கிராமத்தில் சித்திரைத் திருவிழா கடந்த 5ஆம் தேதி 'சாகை வார்த்தல்' நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 'சாமி கண் திறத்தல்' நிகழ்ச்சி வருகிற 23ஆம் தேதி நடக்கிறது.
இதில், திருநங்கைகள் கலந்துகொண்டு கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக்கொள்வார்கள். மேலும், 24ஆம் தேதி அரவான் பலியிடும் நிகழ்ச்சியும், தாலி அறுத்தல் நிகழ்வு மற்றும் தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகம் கிராமத்திற்கு வருவர்.
இந்நிலையில், இன்று (ஏப்.21) மாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தீவுத் திடலில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, சென்னை திருநங்கை தலைவர்கள் (நாயக்குகள்) அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து 'கூவாகம் திருவிழா' என்ற தலைப்பில், திருநங்கைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.