சென்னை:சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள என்.என்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் வியாபாரிகள் சங்க துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும், இவர் அதே பகுதியில் செருப்பு கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று பூட்டப்பட்டிருந்த இவரது செருப்பு கடை மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, கடைக்கு முன் பக்கம் தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்த சாகுல் ஹமீது மற்றும் கடைக்கு அருகில் இருந்தவர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதுகுறித்து சாகுல் ஹமீது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.