சென்னை:சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை முடியும் நிலையில் இருப்பதால் விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை, அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியது தொடர்பாக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததுடன், சென்னை பெருநகர காவல் இணை ஆணையர் சரோஜ் குமார் தாக்கூர் தலைமையில் ஆவடி சரக சட்டம் - ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்குத் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது. குழு தனது விசாரணை அறிக்கையை வாரந்தோறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.