தமிழ்நாடு

tamil nadu

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக்கூட்டம்: அதிகாரிகளை கடிந்து கொண்ட உதயநிதி.. காரணம் என்ன? - Monsoon precautionary measures

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 9:34 AM IST

Monsoon precautionary measures: சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னேற்பாடு பணிகள், வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்த அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டத்தில், புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்
கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், ரிப்பன் கட்டட வளாக கூட்ட அரங்கில் அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் சென்னை மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, அந்தந்த தொகுதிகளில் பருவ மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரகளிடம் சாலை, மழைநீர் கால்வாய் தொடர்பான கேள்விகளை அடுக்கினர். ஏன் மாநகராட்சி பணிகள் முழுமையாகவும், முறையாகவும் நடைபெறவில்லை என அதிகாரிகளை கேட்டனர். பின்னர், பருவமழையால் பொதுமக்கள் அதிக பாதிப்பு அடைவதால் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

கூட்டத்துக்கு தலைமை தாங்கிய உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டு கூறிய புகார் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த கூட்டம் முடிந்து அடுத்த 15 நாட்களில் மற்றொரு கூட்டம் கூட்டப்படும். அந்த கூட்டத்தில் இன்று தெரிவித்த புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, "வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் சென்னையில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதற்காக சென்னை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

இதில், நீர்வளத்துறை அமைச்சர், விளையாட்டு துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், மின்சாரத் துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சென்னையை சார்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதிகளின் வாரியாக என்ன பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது?, என்ன பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? என்ன பணிகள் விரைவாக நடைபெற வேண்டும் என்பதன் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை மாநகராட்சி ஆணையர் விரிவாக கூறியுள்ளார். சென்னையில் 3,040 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால்வாய் உள்ளது. அதில் முதற்கட்ட பணியாக 792 கிலோ மீட்டர் கால்வாயில் 611 கிலோ மீட்டர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மூலம் பராமரிக்கப்படும் 51.4 கிலோ மீட்டர் நீளமுள்ள நீர் வழி கால்வாய்களை மிதக்கும் ஆம்பியன்ட் ரோபோட் எக்ஸ்லேட்டர் மூலம் 60 சதவீதம் தூர்வரும் பணி முடிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 69 ஆயிரத்து 17 எண்ணிக்கை கொண்ட வண்டல் மண் சேகரிக்கும் தொட்டியில் 64 ஆயிரத்து 425 தொட்டியில் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. 2021 முதல் 2024 வரை ரூ.2 ஆயிரத்து 958 கோடி மதிப்பீட்டில் 745.79 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதியதாக மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ.2020.36 கோடி மதிப்பீட்டில் 400 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.

2021 முதல் 2024 வரை 12 ஆயிரத்து 6 புதிய சாலைகள் 2049.30 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.1,645 கோடி செலவில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. புதிய சாலைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. சென்னையில் 20 இடங்களில் அடைக்கப்பட்டுள்ள கால்வாய்களுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் அந்தந்த இடங்களில் ஆய்வு செய்ய இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:பட்டு வளர்ச்சித்துறை நிர்வாகம் அரசுக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு! - Department of Sericulture

ABOUT THE AUTHOR

...view details