சென்னை: சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், ரூ.66.15 கோடி மதிப்பிலான 58 புதிய BS-VI தாழ்தள பேருந்துகள், 30 சாதாரண BS-VI பேருந்துகள் மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் என மொத்தம் 100 பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து் தொடங்கி வைத்து, பேருந்தின் உள்ளே சென்று அதன் சிறப்பு அம்சங்களைக் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பேருந்தின் சிறப்பம்சங்கள்: இந்த புதிய பேருந்துகள் பிராட்வே - கிளாம்பாக்கம், கோயம்பேடு, ஆவடி, பூந்தமல்லி, ரெட் ஹில்ஸ், திருப்போரூர், திருவெற்றியூர், தியாகராய நகர் என பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளுக்கு நீல நிற வண்ணம் பூசப்பட்டுள்ளது.
இப்புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக ஏறிச் செல்லும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 75 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இப்பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் எளிதில் ஏறி இறங்க வசதியாக பேருந்தின் தளம் 400 மி.மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தாழ்தளத்தின் உயரத்தை இடதுபுறத்தில் 60 மி.மீட்டர் அளவில் சாய்த்து மிக எளிதாக ஏறி, இறங்கும்படி kneeling வசதியும் உள்ளது.