கோயம்புத்தூர்: கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் ஐடி விங் (IT WING) 2.0 என்ற பெயரில் சமூக வலைத்தள தன்னார்வலர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நேற்று (பிப்.29) கலந்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கோவையில் சமூக வலைத்தளம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. கோவையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவரைத் தொடர்ந்து பதற்றத்திலேயே வைத்துள்ளீர்கள். சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாட்டை, சமூக வலைத்தளம் மூலம் மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்த்தீர்கள். சமூக வலைத்தளங்களால் சில நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் நடந்துள்ளது.
கத்தியை விட உங்க கைப்பேசி கூர்மையான ஆயுதமாக உள்ளது. தற்போது பேஸ்புக், எக்ஸ் தளம்(x), இன்ஸ்ட்ராகிராம், யூடியூப் ஆகியவற்றில் ஒரு பதிவு செய்தால் ஒரே நொடியில் மில்லியன் கணக்கான மக்களை சென்றடைகின்றது. தமிழ்நாட்டில் 6 வருடத்திற்கு முன்பு பிரதமர் மோடியை ஜல்லிக்கட்டு மூலம், சமூக வலைத்தளம் ஆட்டம் காண வைத்தது. 2021ஆம் ஆண்டு அடிமைகளை வீட்டுக்கு அனுப்பினோம்.
புயலின்போது வராதவர்கள், தமிழகம் வருவது தேர்தலுக்காகவே:இந்த முறை அடிமைகளின் எஜமானார்களை வீட்டுக்கு அனுப்புவோம். புயல் வந்தால் கூட தமிழ்நாட்டு பக்கம் தலை வைக்காதவர்கள், தேர்தல் வந்தால் வாரத்துக்கு இரண்டு முறை வருவார்கள். பாஜக முழுக்க முழுக்க பொய்களை மட்டும் நம்பி அரசியல் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். பல்லடத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அம்மையார் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி அவர், அதிமுக ஆட்சி சிறந்த ஆட்சி என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா ஊழல் செய்து ஒருமுறை அல்ல பலமுறை சிறை சென்றவர் என்று பிரதமருக்கு தெரியாதா? உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவருக்கு மலர்தூவி, ஊழலை ஒழிக்க புறப்பட்ட ஒரே பிரதமர் மோடிதான். இவருடைய 10 ஆண்டுகால ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடந்துள்ளன. கண்ரோலர் ஆஃப் இந்தியா மத்திய, மாநில அரசுகளின் செலவு கணக்குகளை தணிக்கை செய்யும். அதில், ரூ.7.5 லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை.