ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கீழக்கரை பகுதியில் கழக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மாலையில் ராமநாதபுரம் அரண்மனை முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய உதயநிதி நீட் தேர்வு விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பாராட்டியே ஆக வேண்டும், அவர் இருந்தவரைத் தமிழகத்திற்குள் நீட் தேர்வை நுழைய விடவே இல்லை எனப் புகழ்ந்தார். ஆனால் அவர் மறைவுக்குப் பின் வந்த எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வு விவகாரத்தில் கையெழுத்திட்டு அவருக்கு நேர் எதிராகச் செயல்பட்டதாகக் கூறினார்.
மேடையிலிருந்த நவாஸ் கனியைச் சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின் பொங்கலுக்குத் தான் பொங்கல் அனுப்புவதாகவும் பதிலுக்கு அவர் ரம்ஜானுக்குப் பிரியாணி அனுப்புவதாகவும் இதுதான் தமிழகத்தின் நிலை இங்கு மதத்தை வைத்து பாஜக அரசியல் செய்ய இயலாது என்று தெரிவித்தார். இந்தக் கூட்டத்திற்கு உரிமை மீட்பு குரல் என்று பெயரிடப்பட்டுள்ளதற்குக் காரணம் நமது உரிமையைக் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டதாகச் சாடினார்.
பின்னர் நீட் தேர்வு குறித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி, தமிழகத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்திருப்பதாகப் பட்டியலிட்டார் இந்த முறை சென்னை சேர்ந்த ஜெகதீசன் உயிரிழந்த நிலையில் துயரத்தில் அவரது தந்தையும் உயிரிழந்திருப்பதாகவும், ஆமாம் தேர்தல் நேரத்தில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொன்னோம் அதுக்காக தீர்மான நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் இதுவரைக்கும் கையெழுத்துப் போடவில்லை. சேலத்தில் மாநாடு நடத்தி ஐம்பது நாளில் 50 லட்சம் கையெழுத்து வாங்கி தலைவர்(மு.க.ஸ்டாலின்) அவர்களிடம் கொடுத்திருக்கிறோம். நிச்சயம் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆட்டுக்கு எப்படி தாடி தேவையில்லை அதே போல மாநிலத்துக்கு ஆளுநர் தேவை இல்லை ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் கிடையாது அவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுகிறவர் அவர் ஒரு தபால்காரர் மட்டுமே எனவே மாநில அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையை மட்டுமே வாசிக்க வேண்டும் மாறாக அவர் தமிழ்த்தாய் வாழ்த்தை அழிக்க நினைப்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது நாங்கள் தேசிய கீதத்தை நேசிப்பதைப் போலத் தமிழ்த்தாய் வாழ்த்தையும் பெரிதும் நேசிக்கிறோம் எனவே இனி நடக்கும் கட்சிக் கூட்டங்கள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்துடனே கூட்டம் தொடங்கும் எனக் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:யார் இந்த செல்வப்பெருந்தகை? - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக உயர்ந்தது எப்படி?