விருதுநகர்:நாடளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்.19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், தமிழகத்தில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நிறைவுபெற்றதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியா கூட்டணி சார்பில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூரின் தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் காங்கிரஸ் வேட்பாளரான மாணிக்கம் தாகூர் எம்பி பேசுகையில், "அமைச்சர் தங்கம் தென்னரசு தென் தமிழகத்தின் அடையாளமாக உருவெடுத்து வருகிறார். இந்தி மற்றும் ஆங்கில ஊடகங்கள் மோடி அமித்ஷாவின் கைப்பாவையாக மாறிவிட்டன.
ராமர் கோயில் திறக்கும் நேரத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டணி 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும். பாஜகவின் 'பி' டீமான அதிமுக, தேமுதிக தனித்து நின்று சிறுபான்மை மக்களைக் குழப்புகின்றனர்" எனப் பேசினார்.
பின்னர் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரே குறிக்கோளுடன் இருக்கிறது. மோடியின் 10 ஆண்டு கால அவல நிலையை அகற்ற, இந்தியாவை காப்பாற்ற ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும்.