திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோவிலுக்குச் செல்லும் சாலையில் இருபுறமும் பழமையான மருத மரங்கள் காணப்படுகின்றன. இவை அம்பாசமுத்திரத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பல திரைப்படக் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாலையில் உள்ள மருத மரங்களில், கம்பிகளை அடித்து அதில் மின்கம்பிகளை இழுத்துச் சென்றுள்ளனர் மின் ஊழியர்கள். ஒரு மரத்தில் 3 ஆணிகள் வீதம் 3 மின் கம்பிகளை கட்டிக்கொண்டு சென்றுள்ளனர். இந்த முயற்சியால் மரத்தின் ஆயுள் காலம் குறைவதோடு, மரத்தில் ஈரப்பதம் இருப்பதால் மின்சாரம் பாய்வதற்கும் வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பும் கேள்விக்குறியாவதாக கூறப்படுகிறது.
எனவே, மரத்தில் மின் வயர்கள் கொண்டு சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையானது. குறிப்பாக, மின்வாரியத்தின் இந்த செயலைக் கண்டு பொதுமக்களும், சூழலியல் ஆர்வலர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து செய்தி வெளியான நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு கவனத்துக்கு இச்சம்பவம் சென்றது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மரங்களில் இருந்து மின் வயர்களை அப்புறப்படுத்தி, புதிதாக மின் கம்பங்கள் வழியாக வயர்கள் கொண்டு செல்ல அமைச்சர் தங்கம் தென்னரசு, நெல்லை மண்டல மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று ஒரே நாளில் முழு வீச்சில் மின்வாரிய ஊழியர்கள், மரங்கள் வழியாக கொண்டு செல்லப்பட்ட மின் வயர்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி, புதிதாக மின்கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நெல்லை அம்பாசமுத்திரத்தில், மரத்தில் இன்சுலேட்டர் பொருத்தப்பட்டு மின் கம்பிகளைப் பதித்து மின் இணைப்பு வழங்கப்படுவதாக செய்தி வெளியான நிலையில், மின் வாரிய அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, உடனே மின்கம்பம் அமைக்க உத்தரவிட்டேன். இந்நிலையில், அதற்கான பணிகள் தற்போது நிறைவுபெற்று, பாதுகாப்பான வகையில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:விமான என்ஜினில் வெளிவந்த புகை.. எரிபொருள் அதிகமாக நிரப்பியது காரணமா? - சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!