சென்னை:நாட்டின் 78வது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் சார்பாக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர், விழாவில் பேசிய முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நிதி & மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சுதந்திர தின விழா உரையில் மிகச் சிறப்பான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
அதுவும் 'முதல்வர் மருந்தகம்' என்ற அறிவிப்பு மூலம் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படும் மக்கள், அதற்கான மருந்துகளை மிக குறைந்த விலையில் ஜென்ரிக் மருந்துகளாகப் பெற வழிவகை செய்துள்ளார். இதன் மூலம் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.
'முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டம்' மூலம் முன்னாள் படை வீரர்கள் தொழில் துவங்க 1 கோடி ரூபாய் வரை வங்கிக் கடன் பெற வழிவகை செய்யப்படும். தியாகிகள் ஓய்வூதியம் 20 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரமாகவும், அவர்களது குடும்பங்களுக்கான ஓய்வூதியம் 11 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.