தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை தனியார் மயமாக்கபடாது - மருத்துவத்துறை அமைச்சர் உறுதி!

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை தனியார்மயமாக்கப்படாது என்றும், மருத்துவமனையை மேம்படுத்துவதற்காக தொழில்நிறுவனங்களிடம் இருந்து நிதி கேட்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2024, 5:52 PM IST

சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிந்தரநாத் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தை தனியார்மயமாக்க மக்கள் நல்வாழ்வுத்துறை முயல்வது கவலை அளிக்கிறது. அந்நிறுவனத்தில் நீண்ட நாட்களாக உள்ள பிரச்சினைகளுக்கு காரணம் அரசு தான். அக்குறைகளை சரிசெய்ய முயற்சி எடுக்காமல், அந்த நிறுவனத்தை தனியார் மயமாக்குவது ஏற்புடையதல்ல.

இது ஏழை நோயாளிகளை மிகவும் பாதிக்கும். அரசு மனநல மருத்துவர்களை திறமையற்றவர்கள், நிர்வாகத் திறனற்றவர்கள், சமூகப் பொறுப்பற்றவர்கள், அக்கறையற்றவர்கள் போன்ற தோற்றத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை உருவாக்குவது சரியல்ல. மனநல காப்பகத்தை தனியார் கம்பெனி போல் ஆக்கிவிட்டால் எல்லாப் பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்பது சரியல்ல. இது பொதுத்துறை மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தும் வேலையை மக்கள் நல்வாழ்வுத்துறை செய்வது போன்ற செயலை செய்யக்கூடாது. போதிய நிதியை அரசு ஒதுக்கீடு செய்து, ஊழியர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளையும் தீர்த்து, சென்னை அரசு மனநலக் காப்பகத்தை அரசு மேம்படுத்த வேண்டும். நன்கொடை வழங்க முன்வருவோரிடம் நன்கொடைகளையும் பெற்றுக் கொள்ளலாம். அதை அந்நிறுவன மேம்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.

அதோடு, மாவட்டந்தோறும், தரமான இலவச மனநல காப்பகங்களை அரசு உருவாக்கிட வேண்டும். அதை விடுத்து, மனநலம் பாதிக்கப்பட்டோரை தனியாரின் கருணையில் வாழும் அவல நிலைக்கு உள்ளாக்கக் கூடாது. சுயமரியாதையில் அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு, சுயமரியாதையுடன் மனநலம் பாதிக்கப்பட்டோர் வாழும் நிலையை உருவாக்கிட வேண்டும். அதை உறுதி செய்திட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை என்பது 100 ஆண்டுகால பெருமைக்குரிய ஒரு மருத்துவமனை.

இதையும் படிங்க:சிறு வயதில் எல்லாரும் பாம்பை பிடித்து தான் வளர்ந்து இருப்பார்கள் - விஜயை சாடிய செல்வப்பெருந்தகை!

இதுவரை எந்த முதலமைச்சரும் அந்த மருத்துவமனைக்கு சென்று வளர்ச்சி திட்டங்களை திறந்து வைத்தார்களா என்று தெரியவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இடைநிலை பராமரிப்பு மையம் ஒன்றை தொடங்கி வைத்தார். மனநல சேவையினை வழங்குவதற்கு 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2022 டிசம்பரில் புதிய கட்டிடம் கட்டும் பணியினை தொடங்கி வைத்திருக்கிறார்.

மிக விரைவில் இந்தக் கட்டிடம் திறந்து வைக்கப்படும். மேலும் மருத்துவமனையில் 4.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மனமகிழ் மன்றம், அரசு மனநலகாப்பகத்தில் பாரம்பரிய கட்டிடமாக தொடங்கப்பட்டு தொன்மை மாறாமல் கட்டிடத்தை புனரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மின்காந்த தூண்டல் சிகிச்சைமுறையும் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆட்டிசம் பாதிக்கப்பட்டு கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு பன்முக சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

பணியாளர்களைப் பொறுத்தவரை விளையாட்டு போட்டிகளை மாநில அளவிலும், தேசிய அளவிலும் பங்கேற்று மனநலன் பெற்றதற்கு பிறகு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வந்தனர். ‘நட்புடன் உங்களோடு’ என்னும் தொலைபேசி திட்டம் இந்த மருத்துவமனையில் இருந்துதான் 2022ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. 2022 ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 520 நோயாளிகளுக்கு இந்தியாவில் முதன்முறையாக மனநலன் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டது.

அனைத்து மருத்துவனைகளுக்கும் CSR நிதியுதவி பெற்று மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மனநல மருத்துவமனைக்கும் CSR நிதியுதவி பெற்று மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் இம்மருத்துவமனை தனியாருக்கு தாரைவார்க்கப்பட மாட்டாது. தன்னார்வலர்களுக்கு தத்து கொடுக்கவும் படமாட்டாது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மருத்துவமனையை மேம்படுத்தவே நிதியுதவி கேட்டுள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்களிடையே நடைபெற்ற சண்டையில் 2 பயிற்சி மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவம் படிக்க வரும் மாணவர்கள் நீட் போன்ற தேர்வுகளை எழுதியப் பின்னர் தான் வருகின்றனர். எனவே அவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் ராகிங் நடைபெறவில்லை” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details