தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை-தூத்துக்குடி ரயில் பாதைத் திட்டம் கை விடப்பட்டதா? குழப்பத்துக்கு விளக்கம் அளித்த அமைச்சர்..! - MADURAI TUTICORIN RAILWAY PROJECT

மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டத்தின் நில எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சிவசங்கர், ரயில் (கோப்புப்படம்)
அமைச்சர் சிவசங்கர், ரயில் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2025, 6:52 PM IST

சென்னை: மதுரை-தூத்துக்குடி அகல இரயில் பாதைத் திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டமாகும். எனவே, இத்திட்டத்திற்கு தேவையான நில எடுப்புப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; '' ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் ஜன.10 அன்று அளித்த பேட்டியில், அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி அகல இரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரியிருந்ததால், இத்திட்டம் கைவிடப்பட்டதாக ஒன்றிய அமைச்சர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

இதற்கு உடனடியாக அடுத்த நாளே நான் ஒரு விரிவான மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளேன். அதில் மதுரை-தூத்துக்குடி (வழி அருப்புக்கோட்டை) புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரயில்வே துறையால் நிலத்திட்ட அட்டவணைப்படி 926.68.84 ஹெக்டேர் நில எடுப்பு செய்து ரயில்வே துறைக்கு ஒப்படைக்குமாறு மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க, இத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நில எடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, இதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கி தமிழ்நாடு அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தேன்.

முன்னதாக, மேற்காணும் இத்திட்டம் உள்ளிட்ட ஏனைய ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று 19.08.2024 நாளிட்ட கடிதம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர், ஒன்றிய ரயில்வேத் துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இத்திட்டத்திற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மதுரை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களால் 09.08.2024, 04.09.2024 மற்றும் 27.09.2024 ஆகிய நாட்களில் முறையே தென்னக ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும், இது குறித்து தென்னக ரயில்வே துணைத் தலைமைப் பொறியாளர் தனது 19.12.2024 நாளிட்ட கடிதத்தில், மதுரை-தூத்துக்குடி அகல ரயில்பாதை திட்டம் தொடர்பாக மீளவிட்டான்-மேலமருதூர் வரை 18 கி.மீ. அளவில் பணி முடிக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள பிரிவுகளில் திட்டம் தொடர்வது தொடர்பாக தென்னக ரயில்வேயால் இக்கருத்துரு (CONCEPT) குறைந்த சரக்கு வாய்ப்புகள் உள்ளதால் கைவிடப்பட்டதாக தெரிவித்ததையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இதையும் படிங்க: 'இந்த பொங்கலை மறக்கவே மாட்டோம்'.. சென்னை சூளைமேட்டில் கோலாகலமாக நடந்த சமத்துவ பொங்கல்...!

எனவே, இத்திட்டத்தினை கைவிடுவது குறித்து எந்தவிதமான கடிதமோ, வாய்மொழியாகவோ தமிழ்நாடு அரசால் ரயில்வே துறைக்கு தெரிவிக்கப்படாத நிலையில் முதலமைச்சரால் பெரிதும் வலியுறுத்தப்படும் இத்த திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்கி, உடனடியாக திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு கோரிக்கையும் விடுத்திருந்தேன்.

எந்த ஒரு பிரச்சனையும் இல்லை

இந்நிலையில் இன்று (15.01.2025) தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 10.01.2025 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர்கள் மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் குறித்து கேட்ட போது, அங்கு நிலவிய இரைச்சலான சூழ்நிலையினாலும், தேசிய மற்றும் மாநில ஊடகங்களைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே பிரச்சினைகள் குறித்து பல கேள்விகளைக் கேட்டதால், ஒன்றிய அமைச்சர் தனுஷ்கோடி பாதைத் திட்டம், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் கைவிடப்பட்டது குறித்து அளித்த பதிலை மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டத்திற்கான பதில் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை-தூத்துக்குடி திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் நிலம் சம்பந்தமாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என ஒன்றிய ரயில்வேத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளதாக, அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டமாகும். எனவே இத்திட்டத்திற்கு தேவையான நில எடுப்புப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இதற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்து, இத்திட்டத்தினை விரைந்து நிறைவேற்றிட ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details