சென்னை:அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க :அரசு கார் அல்லாது சொந்த காரில் வந்து ஜாமீன் கையெழுத்திட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!
471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. குறிப்பாக, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், அதேபோல மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின் படி, இன்று(அக்.5) மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணை அதிகாரி உதவி ஆணையர் சுரேந்தர் முன் ஆஜராகி ஜாமீன் கையெழுத்திட்டு சென்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்