திருநெல்வேலி:நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலோடு இணைந்தது மானூா் அம்பலவாண சுவாமி திருக்கோயில். இந்த கோயில் 8ஆம் நுற்றாண்டை சோ்ந்தது. இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த உத்தரவிடப்பட்டு கடந்த வருடம் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், 117 ஆண்டுகள் கழித்து இன்று அஷ்டபந்தன மஹாகும்பாபிஷே விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 6ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் ஆரம்பிக்கப்பட்டு யாகசால பூஜைகள் நடந்து வந்தது. அதனைத்தொடர்ந்து, சுவாமி விமான கோபுரம் மூலஸ்தானம் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்து தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது , “மானூர் சுவாமி கோயிலில் 117 ஆண்டுகளுக்கு பின்பு குடமுழுக்கு நடந்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற முதல் 2021- 22 ஆண்டில் 1000 ஆண்டுகள் தொன்மையான கோயில்கள் மற்றும் போதிய வருமானம் இல்லாத கோயில்களில் குடமுழுக்கு நடத்த 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியின் கீழ் இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
2098 கோயில்கள் குடமுழுக்கு:2023-2024, 2024-2025 என மூன்று ஆண்டுகளில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உபயதாரர்கள் மூலம் 142 கோடி பெறப்பட்டு 1000 ஆண்டுகள் பழமையான 37 திருக்கோவில்கள் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்றுவரை நெல்லை மானூர் அம்பலவானசுவாமி கோவிலுடன் சேர்த்து 2098 கோயில்கள் குடமுழுக்கு நடந்துள்ளது.
250 கோவிலில் குடமுழுக்கு செய்ய திட்டம்: இன்று மட்டும் 55 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 250 திருக்கோயில்களில் குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மானுர் அம்பலவான சுவாமி கோயிலுக்கு செந்தமான 173 ஏக்கர் நஞ்சை, 28 ஏக்கர் புஞ்சை நிலங்கள் முழுவதும் குத்தகைக்குவிடப்பட்டு அந்த தொகை கோயிலின் அன்றாட செலவுகளுக்கு பயன் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.