கரூர்: ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயிலினை, ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணியினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (பிப்.2) தொடங்கி வைத்தார். பின்னர், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இந்து சமய அறநிலையத்துறை புதுப்பொலிவுடன் வீறுநடை போடுகிறது என்றால், முதலமைச்சரின் உத்தரவுகளும், உற்சாகமும்தான் முக்கிய காரணமாகும். அந்த வகையில், நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷமான திருக்கோயில்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத காரணத்திற்காக, முதலமைச்சர் ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் நடத்த வேண்டும் என்ற காரணத்திற்காக, கடந்த இரண்டு நிதியாண்டுகளில் தலா 100 கோடி ரூபாய் வீதம் 200 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கினார்.
இந்நிதியுடன் உபயதாரர்களின் பங்களிப்பையும் சேர்த்து 197 திருக்கோயில்களில், 304.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 12 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளது. 13 திருக்கோயில்களுக்கு குடமுழுக்குக்கள் இந்த ஆண்டில் நடைபெறும்.
வரலாற்றில் ராஜராஜ சோழன் காலத்தில்தான், திருக்கோயில்களின் பணிகள் உயர்வு பெற்றது என்று சொல்வார்கள். அதேபோல், ராஜராஜ சோழனுக்குப் பிறகு இந்த ஆட்சியில்தான் சிதிலமடைந்த திருக்கோயில்களின் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பக்தர்களின் தரிசனத்திற்கு மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யும் ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது.
கரூர் திருமுக்கூடலூர் அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் ஒட்டுமொத்தமாக ரூபாய் 5 கோடி மதிப்பில் மூலவர் சன்னதி, அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம் புனரமைத்தல், அம்பாள் சன்னதி புனரமைத்தல் பணிகளும், யாகசாலை, சுப்பிரமணிய சன்னதி மீள கட்டுதல் பணி போன்ற 11 பணிகள் இன்று (பிப்.2) மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திருக்கோயிலுக்கு எப்போது குடமுழுக்கு நடைபெற்றது என்ற குறிப்பு இல்லாமல் இருக்கிறது.