சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை, ஏழுகிணறு பகுதியில் அமைந்துள்ள வள்ளலார் வசித்த இல்லத்தில் அன்னதானம் நடைபெற்றது. இன்று (பிப்.11) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கும் நிகழ்வை இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு கொடியேற்றி தொடங்கி வைத்து, மக்களுடன் உணவருந்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "தைப்பூசத்தை முன்னிட்டு வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் மூன்று நாட்களுக்கு தினமும் 10,000 சன்மார்க்க அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வடலூரில் சர்வதேச தியான மையம் அமைந்தால் உலகளவில் வரக் கூடிய வள்ளலார் வழி தோன்றளாளர்களுக்கு மிக சிறப்பான சூழல் அமையும். அதற்கு அரசாணை பிறப்பித்தவர் முதலமைச்சர். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், சிலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சிக்கல்களை களைந்து வென்று அந்த பணிகளை தொடருவோம். வள்ளலார் மறுஉருவக இல்லத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வடலூர் அன்னதான மையத்தில் மரங்களை வெட்டியதற்கு எந்த பக்தர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசுக்கு எதிராக இருக்கக்கூடிய சக்திகள் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளை அறநிலையத்துறை ஆணையரகத்திற்கு நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில் ஜோதி தரிசனத்தை காண வளர்ந்து விட்ட கிளைகளைத் தான் ஒழுங்குப்படுத்தி இருந்தோம். மரங்களை வெட்டவில்லை என தெரிவித்துள்ளனர். ஆதாரம் இருந்தால் கொடுங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிளிக்க இரண்டு மூன்று நாட்களாவது இடைவெளி தேவை.
மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு எதிராக வியூக மன்னர்களால் எவ்வளவு தூரம் பலன் இருக்கும் என்று தெரியவில்லை. நாங்கள் மக்களோடு கூட்டணி வைத்து இருக்கின்றோம். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் ஈரோடு இடைத்தேர்தலில் நின்று அனைவரும் முன் வைப்பு தொகை இழந்தது. இது ஒரு முன்னோட்டம் தான். 2026 சட்டமன்ற தேர்தலிலும் முதலமைச்சர் கூறியதை போல 200-ம் தாண்டி உறுதிமிக்க ஒரு ஆட்சியாக அமையும். முதலமைச்சர் இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்.