சென்னை:சென்னையை அடுத்த முடிச்சூர் பகுதியில் வெளிவட்ட சாலையில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். ஆம்னி பேருந்து டிரைவர்கள் ஓய்வெடுக்கும் அறை, உணவு அருந்தும் இடம், கழிவறை வசதிகள், குளியலறை கட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்த அமைச்சர் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், “கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த ஆட்சி காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டு வந்த பேருந்து நிலையத்திற்கு தேவையான அனைத்து பணிகளையும் தற்போது செய்து வருகிறோம்.
அந்த வகையில் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்காக முடிச்சூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில் 40 கோடி ரூபாய் செலவில் பல்வேறு வசதிகளுடன் ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஆம்னி பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறேன்.