புதுக்கோட்டை:புதுக்கோட்டை- திருச்சி சாலையில் உள்ள அய்யனார் திடலில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு வேளாண் இயந்திர கருவிகள் குறித்த கையேட்டினை வெளியிட்டார்.
அமைச்சர் ரகுபதி பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:மகாவிஷ்ணு விவகாரம்: மதமாற்றம் குறித்து பேசுவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? - வானதி சீனிவாசன் கேள்வி!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், "சிறைக் கைதிகளை விடுவிப்பதில் ஆளுநர் காலம் தாழ்த்திருப்பதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. அதுவே நம்முடைய கருத்தாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்றார்.
திமுகவை திருமாவளவன் மிரட்டுவதாக எல்.முருகன் கூறிய கருத்திற்கு பதிலளித்த அவர், "எங்களுடைய நண்பர்கள் யாரும் எங்களை மிரட்ட முடியாது. திமுகவை எந்த கட்சியும் மிரட்ட முடியாது. மிசா காலத்திலேயே நாங்கள் பயப்படாதவர்கள். எங்களை நம்பி வந்தவர்களை நாங்கள் மோசம் செய்ய மாட்டோம். தோழமைக் கட்சிகளுக்கான மரியாதையை இந்தியாவிலேயே எந்த கட்சியும் கொடுக்காத வகையில் நம்முடைய முதலமைச்சர் கொடுகிறார் எனக் கூறினார்.
மேலும், குண்டர் சட்டம் குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவித்தது குறித்து பேசிய அவர், "இந்த சட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கையைப் பெற்று மாவட்ட ஆட்சியர் அதற்குண்டான பரிந்துரையை செய்கிறார். அதன் அடிப்படையிலேயே உள்துறை அதற்கான ஒப்புதலை தருகிறது. வழக்குகள் இல்லாத யாரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது கிடையாது. அப்படி ஒரு சில தவறுகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டுமேயானால் அதை திருத்திக் கொள்வோமே தவிர, நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. யார் மீது வேண்டுமென்றே குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதில்லை" என்றார்.
மீனவர்கள் சிறை பிடிப்பது தொடர்பாக தமிழக அரசு அழுத்தம் கொடுக்க முடியுமே தவிர, கடல் எல்லை என்பது மத்திய அரசின் கையில் உள்ளது. உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக முதல்வர் இது தொடர்பாக கடிதம் எழுதி வருகிறார். அடிக்கடி கடிதம் எழுதி இதன் மூலமாக சிலரை விடுதலை செய்யவும் வைத்திருக்கிறோம். படகுகளை மீட்டுவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் எடுத்து வருகிறார். மீனவர் பிரச்சனை என்பது தமிழக அரசு பிரச்சனை மட்டுமல்ல, மத்திய அரசின் பிரச்சனை, இலங்கை அரசிடம் மத்திய அரசுதான் பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் என அமைச்சர் ரகுபதி கூறினார்.
மேலும் மகாவிஷ்ணு விவகாரம் குறித்து பேசிய அமைச்சர், "மகாவிஷ்ணுவின் வங்கிக் கணக்கில் பணம் பரிவர்த்தனை நடைபெற்று உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்ததான் செய்வார்கள். வங்கி கணக்கில் பணம் வரவு வைத்துள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்துவதில் எந்த தவறும் இல்லை. அவர் வங்கி கணக்கில் பணம் வந்துள்ளது என குற்றம் சாட்டவில்லை. விசாரணை தான் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் யாரையும் பழி வாங்க மாட்டோம்" என தெரிவித்துள்ளார்.