சென்னை:தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படையாக உள்ள நிலையில், சி.பி.ஐ விசாரணை எதற்கு என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவினர் வேண்டுமென்றே கேள்வி நேரத்தில பிரச்சினையை எழுப்பினார்கள் எனவும், மக்கள் மன்றத்தில் தோற்றுவிட்டோம், மக்கள் அதிமுகவை புறக்கணித்து விட்டார்கள் என்பதால் சட்டமன்றத்தில் எதாவது பிரச்சினையை கிளப்பவேண்டும் என அதிமுக இதுபோன்ற செயல்களை செய்து வருகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
அதிமுக ஆட்சி காலத்தில் திமுகவினர் போராட்டம் நடத்தினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என குறிப்பிட்ட அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யாரு தவறு செய்திருந்தாலும், அவர் எந்த பொறுப்பில் இருந்தாலும் பாரபட்சம் இன்றி அவர் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இது போன்ற செயல்களுக்கு திமுக ஒருபோதும் துணை போகாது என திட்டவட்டமாக கூறிய அவர், இதற்கு சி.பி.ஐ.டி (CBCID) விசாரனை தேவையில்லை எனவும் கூறினார்.
வெளிப்படையாக இருக்கிறோம்:சாத்தான்குளம் ஜெபராஜ், பென்னிக்ஸ் அடித்துக்கொலை செய்யப்பட்டார்கள் என்ற விவகாரத்தில் அப்போதைய முதலமைச்சர் உண்மையை மறைத்தார். அதன் காரணத்தால் மட்டுமே திமுக அப்போது சி.பி.ஐ விசாரணை கோரியது எனக்கூறிய, அமைச்சர் ரகுபதி, தற்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசு முற்றிலும் வெளிப்படை தன்மையுடன் விசாரணையை மேற்கொண்டு வருகிறது எனவும் கூறினார்.