புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "எடப்பாடி பழனிசாமி தன்னுடைய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டபோது, சிபிஐ விசாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்திற்கு போனவர். அவர் ஆட்சியில் இருந்தால் சிபிஐ விசாரிக்க கூடாது, ஆட்சியில் இல்லையென்றால் சிபிஐ விசாரிக்க வேண்டும்?. இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்கின்ற எடப்பாடி பழனிசாமிக்கு, நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
தமிழக காவல்துறை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நியாயமாக செயல்படும் என பாதிக்கப்பட்டவருடைய குடும்பத்தினரும், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களும் நம்புகின்றனர். இதில் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இல்லை. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வாங்கிக் கொடுக்க அரசு செயல்பட்டு வருகிறது.
சமூகநீதியை கட்டிக்காப்பதில் இந்தியாவிலேயே திமுகவும், இந்தியா கூட்டணிக் கட்சிகளும் தான் முதன்மை வகிக்கிறது தவிர, வேறு எந்த கட்சிகளும் இல்லை. சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும், இதை நாங்கள் யாருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. திமுக ஒடுக்கப்பட்டவர்களுகாகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் செயல்பட்டு வரும் இயக்கம், ஒடுக்கப்பட்டவர்களை தூக்கிவிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அப்படிப்பட்ட இந்த இயக்கத்தில் தனிப்பட்ட எந்த நபர்களுக்காகவும் நாங்கள் பணிந்து போக வேண்டிய அவசியமில்லை.
மேலும், ஆம்ஸ்ட்ராங் வழக்கில் எப்படிப்பட்டவராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டால் அவர்களை கொண்டு வந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தமிழ்நாடு காவல்துறை தயங்காது. ஓ.பன்னீர்செல்வம் அவரது காலத்தை மறந்து விட்டார். ஒவ்வொரு ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும். ஆனால், நாங்கள் நடக்கும் சம்பவங்களைத் தடுக்கிறோம், தடுக்க முயற்சிக்கின்றோம். தூண்டி விடுவது போன்ற செயல்களை செய்யவில்லை.