புதுக்கோட்டை: கால்நடை வளர்ப்போர் பயன்படும் வகையில் 8 புதிய கால்நடை அவசர ஊர்தி வாகனத்திற்கான சாவி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனங்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் விஜய் கட்சிக்கொடி தொடர்பான சர்ச்சை குறித்த கேள்விக்கு, “எங்களுக்கு மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. நடிகர் விஜய் கட்சி உள்ளிட்ட எத்தனை அரசியல் கட்சிகள் வேண்டுமானாலும் தமிழகத்தில் வரலாம், அது வரவேற்கத்தக்கது. எல்லோரும் அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். திமுக என்ற மாபெரும் இயக்கத்தை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது.
கிருஷ்ணகிரி விவகாரத்தில் வெவ்வேறு சம்பவங்களை முடிச்சு போட்டு இப்போது ஒன்றாக சேர்க்கப் பார்க்கின்றனர். இந்த வழக்கில் கைதான சிவராமன் மருத்துவமனையிலும், அவருடைய தந்தை விபத்திலும் உயிரிழந்துள்ளனர். ஆனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முடிச்சு போட்டு பார்க்கிறார்கள். பாலியல் வழக்கில் குற்றவாளியைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.
தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் பொறுப்பேற்றதன் காரணமாக, மரியாதை நிமித்தமாக தமிழக ஆளுநரைச் சந்தித்தார். யூகங்களாக பல்வேறு கருத்துக்கள், அமைச்சரவை மாற்றம் என்பது குறித்து பேசியதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. கற்பனைகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.