சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது, “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் ஆளுநர் என்பதை மறந்துவிட்டு அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார். ராஜ்பவன் அரசியல் பவனாக மாற்றப்பட்டு வருகிறது. கமலாலயத்துக்கு போட்டியாக ராஜ்பவன் அரசியல் செய்து வருகிறது.
ஆளுநர் ஆன்லைன் ரம்மியின் பிராண்ட் அம்பாசிடர், நீட் தேர்வுகளுக்கான பிஆர்ஓ போல செயல்பட்டு வருகிறார். காந்தி மண்டப வளாகத்தில் மதுபாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளது மிகுந்த வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். சென்னை மாநகரில் காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடங்களில் பகல் நேரங்களில் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மெரினா கடற்கரையில் தினமும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது.
சுத்தத்துக்கு தமிழக அரசு முக்கியத்துவம் தருகிறது. காந்தி மண்டப வளாகத்தில் மதுபாட்டில்கள் கண்டறியப்பட்டது வருத்தமளிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். மகாத்மா காந்தி சூதாட்டத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், இந்தியா முழுவதும் பல வித சூதாட்டங்கள் நடைபெறத்தான் செய்கின்றன.
மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவு:தமிழக அரசு மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவான அரசு. ஆனால், மதுவை தமிழகம் மட்டும் ஒழிக்க இயலாது. அனைத்து மாநிலங்களும் சேர்ந்தால் தான் ஒழிக்க முடியும். மத்திய அரசு கையில் எடுக்க வேண்டும். தமிழகத்தில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. ஆனால், அருகாமையில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மது இருக்கிறது. இந்தியா முழுவதும் ஒரு திட்டம் செயல்பட்டால் மட்டுமே மது ஒழிப்பு நடைபெறும்.
இந்தியா முழுவதும் மது ஒழிப்பு முயற்சி:மற்ற மாநிலங்களில் மது ஒழிப்பு இல்லாத நிலையில், நம் மாநிலத்தில் மட்டும் மது ஒழிப்பு கொண்டு வருவது சாத்தியம் இல்லை. தமிழகத்தில் மட்டும் கொண்டு வந்தால் இங்கு கள்ளச்சாராயம் பெருகும். இதன் காரணமாக, இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா முழுவதும் மது ஒழிப்பு நடைமுறை ஏற்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்வார்.