சென்னை: இந்தியா கூட்டணி என பெயர் வைக்கப்பட்டதால், இந்திய குற்றவியல் சட்டங்களில் இருக்கும் இந்தியா என்ற வார்த்தையை நீக்கி, பாரதிய என்ற வார்த்தையை சேர்த்து புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், தென் இந்திய வழக்கறிஞர்களின் மாநாடு நேற்று(நவ.17) நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
மாநாட்டில் உரையாற்றிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “இந்தியா கூட்டணி புகழ் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக, இந்திய குற்றவியல் சட்டங்களில் இருக்கும் இந்தியா என்ற வார்த்தையை நீக்கி, பாரதிய ஜனதா கட்சிப் பெயரின் முதல் வார்த்தையான பாரதிய என்ற வார்த்தையை சேர்த்து புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அதிமுகவுடன் கூட்டணியா? தவெக அளித்த விளக்கம் !..
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் இருந்து கட் அண்ட் பேஸ்ட் (Cut and Paste ) செய்து பெயரை மட்டும் மாற்றி புதிய குற்றவியல் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இந்தியை மறைமுகமாக திணிக்கும் நோக்கமாகவே இது இருக்கிறது. இந்தியை திணிப்பதும், மதரீதியாக மக்களை பிளவுப்படுத்துவமே மத்திய அரசின் நோக்கம் என்பதால் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் அறிக்கையை பெற்று மத்திய அரசை வலியுறுத்துவோம்,”என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரகுபதி , ஆர்.எஸ்.பாரதி (Credits - ETV Bharat Tamil Nadu) ஆர்.எஸ்.பாரதி: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது, “மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்டங்களின் பெயர்கள் வாயில் நுழையாததால் அதனை உச்சரிக்க விரும்பவில்லை. இந்த சட்டங்களை அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது நீதிபதிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவை இளம் வழக்கறிஞர்களை பெரிய அளவில் பாதிக்கும். தமிழ்நாட்டில் இருந்து இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என்றால் மத்திய அரசு அதனை புரிந்து கொண்டு கைவிட வேண்டும்” என்றார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசியதாவது, “இந்த புதிய 3 குற்றவியல் சட்டங்கள் மோசமானவையாகும். இது நீதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை குறைக்கும் வகையில், சட்ட சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது. இவை அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடியது. எனவே, இவற்றை அனுமதிக்க கூடாது” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்