சென்னை: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 34வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று 348 பேருக்கு பட்டங்களை நேரில் வழங்கினார். இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகளில் 40 ஆயிரத்து 414 பேர் பட்டம் பெற்றனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் இந்தியத் தொழில்நுட்பக் கழக இயக்குநர் காமகோடி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்பதாக அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:கல்லூரிக் கல்வி இயக்குனராக கார்மேகம் ஐஏஎஸ் பொறுப்பேற்பு!
உயர் கல்வித்துறை அமைச்சரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துள்ளார். இது குறித்து அமைச்சர் தரப்பில் கூறப்பட்டதாவது, “பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
அன்று திருநெல்வேலியில் நடைபெறும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஒத்திவைக்க உயர் கல்வித்துறை சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் அதை ஆளுநர் மாளிகை ஏற்க மறுத்ததால் இன்று நடைபெறும் அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் புறக்கணித்தார்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:"ஜனவரி 30 ஆம் தேதியை மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவித்திடுக" - முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் வலியுறுத்தல்